பெயிலான நானே அடுத்த கட்டத்துக்கு முன்னேறி கலெக்டராகி இருக்கிறேன்


பெயிலான நானே அடுத்த கட்டத்துக்கு முன்னேறி கலெக்டராகி இருக்கிறேன்
x

பெயிலான நானே அடுத்த கட்டத்துக்கு முன்னேறி கலெக்டராகி இருக்கிறேன்

திருப்பூர்

பல்லடம்

பல்லடத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவானதால் தற்கொலைக்கு முயன்ற மாணவனை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் சந்தித்து பெயில் ஆகி படித்த நானே அடுத்த கட்டத்துக்கு முன்னேறி மாவட்ட கலெக்டர் ஆகிவிட்டேன். மகிழ்ச்சியோடு படித்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறு என்று ஊக்கப்படுத்தினார்.

தற்கொலைக்கு முயன்ற மாணவர்

பல்லடம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரையும் அழைத்து பல்வேறு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து விசாரித்து குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது மருத்துவமனையில், பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருவதாக கலெக்டரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்

இதையடுத்து அந்த மாணவனை சந்தித்த கலெக்டர், அவனை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவனின் தோளில் தட்டிக்கொடுத்து அறிவுரை வழங்கினார். அப்போது கலெக்டர் அந்த மாணவனிடம் உரையாடியபோது, நானெல்லாம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்து அதன்பிறகு படித்து இப்போது நல்ல வேளையில் தான் இருக்கிறேன். நான் யார் தெரியுமா? இந்த மாவட்ட கலெக்டர். அந்தளவுக்கு படித்து இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தேர்வில் தோல்வி, வெற்றி என்பது மிகப்பெரிய விசயமல்ல. தோல்வி அடைந்தாலும் அதில் இருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவது தான் முக்கியம். இது ஒரு தேர்வு மட்டுமே. தோல்வியால் சோர்வடைய கூடாது. மகிழ்ச்சியாக நம்மை வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு உள்ளது. அதில் எழுதி பலர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

ஆனால் நீ தேர்வில் தோல்வி அடையவில்லை. மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு இப்படி தற்கொலை முயற்சி மேற்கொள்வது கூடாது. நாங்கெல்லாம் பெயிலாகி அதன்பிறகு அடுத்தடுத்து முன்னேறி வந்துள்ளோம். மதிப்பெண் குறைந்து விட்டதற்கு வருத்தப்படக்கூடாது. அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உனக்கு எந்த குரூப் பிடிக்கிறதோ அந்த குரூப்பை தேர்வு செய்து படி. 10-ம் வகுப்பு தேர்வில் விட்ட மதிப்பெண்ணை, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதித்துக்காட்ட வேண்டும். பிளஸ்-2 தேர்வில் நீ பெற்ற மதிப்பெண்ணை உனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களிடம் தெரிவித்து விட்டு எனக்கு செல்போனில் தெரிவிக்க வேண்டும். எனது செல்போன் எண்ணை உனக்கு கொடுக்கிறேன். நீ பிளஸ்-2 முடிக்கும்போது நான் இங்கே இருப்பேனா என்று எனக்கு தெரியாது. ஆனால், பிளஸ்-2 தேர்வில் நான் நல்ல மதிப்பெண் பெற்று விட்டேன். எனக்கு மனது திருப்தியாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க போகிறேன் என்று எனக்கு நீ தெரிவித்தால் போதும். அதுபோன்ற நிலை உனக்கு நிச்சயம் வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்' என்றார்.

நெகிழ்ச்சி

மேலும் மாணவனிடம், என்ன விளையாட்டு உனக்கு பிடிக்கும் என்று கலெக்டர் கேட்டார். எனக்கு கைப்பந்து பிடிக்கும் என்று கூறினான். அதற்கு கலெக்டர், 'நானும் கைப்பந்து விளையாட்டு வீரர் தான். நன்றாக விளையாடு. உன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாதே. உறுதியோடு படி' என்று கூறி மாணவனை தட்டிக்கொடுத்து கலெக்டர் தெம்பூட்டினார். மாணவனின் அருகில் நின்று நிதானமாக அறிவுரை வழங்கிய கலெக்டரின் செயல் அங்கு இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சுகாதார வளாக வசதி இல்லாததால் பஸ் நிலையம் வரை நோயாளிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், சித்தா பிரிவு அறை இருக்கும் இடத்திற்கு வழிகாட்டி பதாகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story