படத்தில் நடிக்க இருப்பதால் ஜாமீன் வேண்டும்: டிடிஎப் வாசன்


படத்தில் நடிக்க இருப்பதால் ஜாமீன் வேண்டும்: டிடிஎப் வாசன்
x

வழக்கு தொடர்பாக மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.

மதுரை,

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் படுத்து கிடந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டி சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்துவிட்டதாக தனது ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் "என்னை பார்த்து தான் மக்கள் கெட்டுப்போகிறார்கள் என்றால்? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு. அதனால் கெட்டுப்போவதில்லையா? சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே. எவ்வளவு பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கு என்றால் எனக்கு மட்டும் ஏன் கொலை வழக்கு? எனக்கு நீதி வேண்டும் என டிடிஎப் வாசன் கேள்வி எழுப்பினார்."

இந்த நிலையில், படத்தில் நடிக்க இருப்பதால் தனக்கு ஜாமீன் வேண்டும் எனக்கோரி டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.

1 More update

Next Story