நடிகராக ஆசைப்பட்ட என்னை நீதிபதியாக்கியவர் எம்.ஜி.ஆர் - முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம்


நடிகராக ஆசைப்பட்ட என்னை நீதிபதியாக்கியவர் எம்.ஜி.ஆர் - முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம்
x

நடிகராக வேண்டும் என்று ஆசையில் இருந்த என்னை நீதிபதியாக்கியவர் எம்.ஜி.ஆர். என்று ஜார்கண்ட் முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் கூறினார்.

பாராட்டு விழா

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும், நீதிபதியாகவும் பணியாற்றிய எம்.கற்பக விநாயகம், ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், 1972-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து சட்டத்தொழிலை தொடங்கினார். சட்டப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.பெரியகருப்பன் வரவேற்று பேசினார். வக்கீல் எச்.மணிவண்ணன் நன்றியுரை ஆற்றினார்.

எம்.ஜி.ஆர். தடுத்தார்

இந்த நிகழச்சியில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், "நீதிபதி கற்பகவிநாயகம், விநாயகர் சதுர்த்தி அன்று பிறந்ததால்தான் அந்த பெயரை அவரது பெற்றோர் சூட்டியுள்ளனர். விநாயகர் புத்திக்கு அதிபதி. அதனால்தான் நீதிபதி கற்பகவிநாயகம், வக்கீலாக, நடிகராக, நீதிபதியாக திறம்பட செயல்பட்டுள்ளார்" என்று பேசினார்.

இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீதிபதி கற்பகவிநாயகம் பேசியதாவது:-

என்னுடைய முன்னேற்றத்துக்கு முக்கியமானவர்கள் 3 பேர். ஒருவர் எம்.ஜி.ஆர்., 2-வது என்னை ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்த முன்னாள் நீதிபதி டி.எஸ்.அருணாச்சலம், 3-வது என் மனைவி. எம்.ஜி.ஆருக்காக நான் ஜெயிலுக்கு சென்று இருக்கிறேன். அப்போது, எம்.எல்.ஏ.வாக வேண்டும். சினிமா நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நாடக நடிகராக இருந்த எனக்கு சினிமா வாய்ப்பு வந்தபோது, என்னை நடிக்க விடாமல் எம்.ஜி.ஆர். தடுத்தார்.

தந்தையின் விருப்பம்

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனதும், ஒருநாள் என்னை அழைத்து அரசு குற்றவியல் வக்கீலாக பதவி ஏற்க சொன்னார். நான் யோசித்தபோது, 'என் தந்தை இலங்கையில் மாஜிஸ்திரேட்டாக இருந்தவர். அவரது மகனான நான் வெறும் 3-ம் வகுப்பு வரைத்தான் படித்துள்ளேன். எனக்கு என் தந்தை செய்ய நினைத்ததை உனக்கு நான் செய்ய விரும்புகிறேன்' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கூறியதும், அரசு வக்கீலாக பதவி ஏற்றேன்.

7½ ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது ஊதியம் குறைவு என்பதால், அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தேன். இதை எம்.ஜி.ஆரிடம் கூறியபோது அவருக்கு கோபம் வந்தது. ஆனால், அவர் மறைந்த பின்னர், என்னை என்னவாக வேண்டும்? என்று அவர் நினைத்தாரோ, அதுபோல ஐகோர்ட்டு நீதிபதியானேன்.

முன்ஜாமீன் நிபந்தனை

ஒருவேளை நான் நடிகராகி இருந்தால் என் வாழ்க்கையை தொலைத்து இருப்பேன். எம்.எல்.ஏ.வாகி இருந்தால், அமைச்சராகி பின்னர் ஜெயிலுக்கு போய் இருப்பேன். நான் நீதிபதியானேன். திருப்தியான வாழ்க்கையை ஒழுக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இதற்கு காரணம் எம்.ஜி.ஆர்.தான்.

10-ம் வகுப்பு 2 முறை தோல்வி அடைந்தேன். மனவேதனையில் இருந்தபோது, காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தை படித்தேன். மனம் தெளிந்தேன். படித்து முன்னேறினேன். இதனால்தான் நான் நீதிபதியாக இருந்தபோது, முன்ஜாமீன் நிபந்தனையாக எம்.எல்.ஏ.வை காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து சத்திய சோதனை புத்தகத்தை படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். இது மிகப்பெரிய விளம்பரமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், ஜி.ஜெயச்சந்திரன், பி.புகழேந்தி, ஆர்.என்.மஞ்சுளா, டி.பரத சக்கரவர்த்தி. சுந்தர் மோகன், ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story