ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியபோது போலீஸ் நிலையத்தில்தான் இருந்தேன் - பெண் போலீஸ் ரேவதி சாட்சியம்


ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியபோது போலீஸ் நிலையத்தில்தான் இருந்தேன் - பெண் போலீஸ் ரேவதி சாட்சியம்
x

ஜெயராஜ்-பென்னிக்ஸ் தாக்கப்பட்டபோது நான் போலீஸ் நிலையத்தில் பணியில்தான் இருந்தேன் என்று பெண் போலீஸ் ரேவதி, மதுரை கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முருகன், முத்துமுருகன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் முக்கிய சாட்சிகளாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த விவகாரத்தில் நடந்த சம்பவத்தை முழுமையாக மாஜிஸ்திரேட்டுவிடம் அப்போதே தனது வாக்குமூலமாக அளித்திருந்தார். அவரது சாட்சியம்தான் இந்த வழக்கின் பிரதானமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் வழக்கு விசாரணையில் ஏற்கனவே 2 நாட்கள் ரேவதி சாட்சியம் அளித்தார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் அவருக்கு காண்பிக்கப்பட்டன. அவை அனைத்தையும் அவர் பார்த்து உறுதிப்படுத்தினார்.

நேற்று மீண்டும் ரேவதி, மதுரை மாவட்ட கோர்ட்டு நீதிபதி நாகலட்சுமி முன்பு ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் சிறையில் இருந்து அழைத்து வந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது ரேவதியிடம், கைதான போலீஸ் தரப்பு மூத்த வக்கீல்,, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று நீங்கள் பணியில் இல்லை. ஆனால் அங்கு ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்து வந்து தாக்கியதாக தெரிவித்துள்ளீர்கள் என்று குறுக்கு விசாரணை நடத்தினார்.

அதற்கு ரேவதி, அவர்களை அழைத்து வந்த போது நான் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தேன். தந்தை-மகன் இருவரையும் மற்ற போலீசார் தாக்கினர் என்று தனது வாக்கு மூலத்தில் ஏற்கனவே தெரிவித்த தகவல்களை மீண்டும் தெரிவித்ததாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story