திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன் - பிரதமர் மோடி டுவீட்
திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் மோடி தமிழில் டுவீட் செய்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரைக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்லாமல் காரில் திண்டுக்கல்லில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்வதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுகல்லில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடிக்கு சாலை எங்கிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்கலைக்கழகத்துக்கு செல்லும் வழியில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான பாஜகவினர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, காத்திருந்த பொதுமக்களை பார்த்தவுடன், காரில் இருந்து வெளியே வந்து கூடியிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,
வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்.
என தமிழில் பதிவிட்டுள்ளார்.