'சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன்' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி


சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x

சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற 1,200 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. எம்.எல்.ஏ. தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன படிக்க வேண்டும், கல்லுரி மாணவர்கள் அடித்து என்ன வேலைக்கு போக வேண்டும் என்பதற்கு வழிகாட்டுவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் கடந்த ஆண்டு முதல்-அமைச்சரின் பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டது. 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று இலக்கு வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் 13 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. நான் சென்ற ஜூன் மாதம் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன். தற்போது 1,200 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை வழங்கினேன். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்' என்று கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு:-

தி.மு.க.வுக்கு யார் போட்டி?

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே?

பதில்:- இந்த கேள்வியை அ.தி.மு.க. தலைவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். தற்போது தி.மு.க.வுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடந்துக்கொண்டிருக்கிறது. எங்களுடைய தலைவரின் வழிகாட்டுதலோடு தேர்தலை எதிர்கொள்வோம்.

கேள்வி:- தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடு அதிகம் இருக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டி உள்ளாரே?

பதில்:- மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நம் மாநிலத்தில் இல்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் கவர்னர் தனக்கான வேலையை செய்யாமல், தேவையில்லாமல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

கேள்வி:- ஆசிரியர்கள் போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிறதே...

பதில்:- ஆசிரியர்கள் போராட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நீங்கள் மீண்டும் ஆரம்பித்து வைத்து விடாதீர்கள். நாங்கள் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். நிதிநிலைமைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசிய பின்னர் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டார்கள். ஒரு சிலர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறந்துவிட்டது. எனவே போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆசிரியர் பணியை தொடருங்கள். கண்டிப்பாக நம்முடைய முதல்-அமைச்சர் என்னென்ன தேவையோ, அதை தகுந்த நேரத்தில் செய்து தருவார்.

கேள்வி:- தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறதே?

பதில்:- தேர்தல் நெருங்க, நெருங்க ரெய்டு நடைபெறுவது வழக்கமானதுதான். இப்போது தினமும் வீட்டுக்கு வருகிற விருந்தாளி போல் ஆகிவிட்டார்கள்.

சனாதனம்

கேள்வி:- சனாதனம் குறித்து...

பதில்:- இதை இன்னுமா நீங்கள் விடவில்லை. கவர்னரிடம் போய் கேளுங்கள்.

கேள்வி:- பிரதமர் மோடி முதல்-அமைச்சரின் மகன் சனாதனம் குறித்த கருத்தை முன்வைத்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்:- நான் ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டேன். இதைவிட முக்கியமான விஷயங்கள் எல்லாம் பேசவேண்டும். இதை திசை திருப்புகிறார்கள். நாங்கள் சி.ஏ.ஜி. அறிக்கை, மணிப்பூர் கலவரம் பற்றி பேசுவோம். சனாதனத்தை பற்றி கண்டிப்பாக நான் தொடர்ந்து பேசி கொண்டுதான் இருப்பேன். இதுபற்றி பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் அவ்வளவு பேசி இருக்கிறார்கள். அதைவிட நான் அதிகம் பேசவில்லை. தற்போது எனது பேச்சை திசை திருப்ப வேண்டாம். தேர்தலுக்கு அப்புறம் இதைப்பற்றி பேசுவோம். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் சி.ஏ.ஜி. அறிக்கையை பற்றி பேசுவோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story