மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக திருச்சியை மாற்ற முயற்சிப்பேன்: கலெக்டர் பிரதீப்குமார் பேட்டி


மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக திருச்சியை மாற்ற முயற்சிப்பேன்: கலெக்டர் பிரதீப்குமார் பேட்டி
x

மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக திருச்சியை மாற்ற முயற்சிப்பேன் என்று கலெக்டர் பிரதீப்குமார் என்று கூறினார்.

திருச்சி

திருச்சி:

கலெக்டர் பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சிவராசு கோவை மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மாவட்ட கலெக்டராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இணை மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் பிரதீப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களின் மனுக்கள்

எனது முதல் பணியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது தீர ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன். மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை மேம்பாடு, தெருவிளக்கு ஆகியவற்றுக்கு எனது கூடுதல் கவனம் இருக்கும். முக்கிய துறைகளான விவசாயம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் இருக்கும்.

தமிழக அரசின் முக்கிய திட்டங்களான கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்குநாமே திட்டம், வீடு தேடி மருத்துவம், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாநிலத்தில் திருச்சியை முதன்மை மாவட்டமாக கொண்டு வருவதற்கு எனது பங்களிப்பை அளிப்பேன். பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் தொடர்பான மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு விரைவில் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டம்

நிலத்தை அளந்து பட்டா மாற்றம் செய்து கொடுக்க போதுமான சர்வேயர்கள் இல்லாததால் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது கிராம நிர்வாக அதிகாரிகளும் நிலம் அளக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற முடிவு பரிசீலனையில் இருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால் மனை உட்பிரிவு மற்றும் பட்டா மாற்றம் சான்றிதழ் அனைவருக்கும் விரைவில் கொண்டு சேர்க்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை தொடர்பான விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்ளும்போது சாலை வசதி பாதிக்கப்படும். இதனால் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தி கூடிய விரைவில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையை சேர்ந்தவர்

கலெக்டர் பிரதீப்குமார் சென்னையை சேர்ந்தவர். கெமிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் முதன் முதலில் கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடியில் உதவி கலெக்டராக பணியாற்றியுள்ளார். பின்னர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் துணை கலெக்டராகவும், நாகப்பட்டினத்தில் கஜா புயல் பாதிப்பு மறுவாழ்வு திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். அதன்பிறகு ராமநாதபுரம் கூடுதல் கலெக்டராகவும், சென்னையில் பொதுத்துறை துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதையடுத்து சென்னையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குரான பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்டர் ஆய்வு

திருச்சி மாவட்ட கலெக்டராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட பிரதீப்குமார், அடுத்த சில நிமிடங்களிலேயே அதிரடி ஆய்வை மேற்கொண்டார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு நோயாளிகளிடம் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மண்ணச்சநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்றுத்தரவும், தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும் தலைமை ஆசிரியரிடம் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து முக்கொம்பில் புதிய கதவணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் தாலுகாவில் 94.கரியமாணிக்கம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராமங்கள், மண்ணச்சநல்லூர் மற்றும் சிறுகாம்பூர் பிர்காக்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு மனுக்களை அளித்தனர். நேற்று நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு வருவாய் கணக்குகளை ஆய்வு செய்தார். இதைத்ெதாடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி பேசினார். அப்போது தாசில்தார் சக்திவேல்முருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். மாலையில் குடிகள் மாநாடு நடைபெற்றது.


Next Story