அதிமுக ஆட்சி மீண்டும் மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் - எடப்பாடி பழனிசாமி உறுதி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்.
சென்னை,
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றமைக்காக வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி !
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்'
என்ற குறளுக்கேற்ப மனிதகுல மாணிக்கம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, தன்னிகரற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 28 ஆண்டு காலம் கழகப் பொதுச் செயலாளராகப் பணியாற்றி, வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து, அரை நூற்றாண்டில் 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு வீறுநடை போட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக என்னை, ஏகோபித்த ஆதரவோடு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ள கழகத் தொண்டர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், நகர, பேரூராட்சி வார்டு கழகச் செயலாளர்கள், மாநகராட்சி வட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கழக தொண்டர்கள், மாநிலக் கழக நிர்வாகிகள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது மக்களாட்சி யுகம். மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே சாமானிய மக்களின் கரங்களில் அதிகாரத்தை சேர்ப்பதுதான். அண்ணா அந்த உயரிய நோக்கத்தில் தான் இயக்கம் கண்டார்கள். அவர் வழியில் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் ஏழை, எளிய, சாமானிய மக்களில் பெரும்பாலானோரை ஜனநாயக அதிகார கோபுரங்களின் உச்சிக் கலசத்தில் வைத்து ஜனநாயக மாண்புகளை உயர்த்திப் பிடித்தார்கள்.
போற்றுதலுக்குரிய தலைவர்களின் சீரிய வழிகாட்டுதலோடு பயணித்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஒரு கிளைக் கழகச் செயலாளராக, நான் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், எனது உழைப்பையும், நேர்மையையும் அங்கீகரித்து இன்று "கழகப் பொதுச் செயலாளர்" என்கிற உயர் உச்ச பொறுப்பிலே அமர்த்தி இருக்கிறது. இது, எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் மட்டுமல்ல; நம்முடைய கழகம் மக்களாட்சித் தத்துவத்திற்கு கொடுத்திருக்கின்ற அங்கீகாரம். நாட்டின் கடைசி மனிதனுக்கும் அதிகாரத்தில் பங்கு உண்டு என்பதை, நம்முடைய கழகம் செயல்படுத்திக் காட்டியிருக்கின்ற தருணம்.
பிறப்பின் அடிப்படையில் தலைமையை தீர்மானிக்காமல், ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து, ஜனநாயக மாண்புகளைக் காத்து நிற்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
கழகப் பொதுச் செயலாளர் தேர்தலில், நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து என் சார்பாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள கழக சொந்தங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எனக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பல்வேறு சமூக இயக்கங்களின் தலைவர்களுக்கும், கலைத் துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
"எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சூளுரைத்த, நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடர, தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்ற தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.