'தமிழ்நாட்டின் அடையாளம்' - மாணவி நந்தினி குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.இதில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் பெற்றார்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில் எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
"கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன்.
நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் "படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்" எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன்.
எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்! என தெரிவித்துள்ளார்.