எங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வோம் - விவசாயிகள் அறிவிப்பு


எங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வோம் - விவசாயிகள் அறிவிப்பு
x

எங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால் அதிகாரியின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வோம் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் விவசாயிகள் அடுக்கடுக்கான கேள்விகளையும், புகார்களையும் கூறினார்கள். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்றும் இதற்கான நியமனம் செய்யப்பட்ட ஆட்களை தவிர்த்து வெளிநபர்கள் வந்து நெல் கொள்முதல் செய்து கொள்கிறார்கள் என்றும், நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என அடுக்கடுக்கான புகார்களை கூறினார்கள்.

மின்மோட்டார்கள் பழுது

தொடர்ந்து விவசாய நிலங்களில் குறைந்த அழுத்த மின்சாரத்தில் மின் மோட்டார்கள் பழுதடைந்து போகின்றன. காட்டு பன்றிகள் தொல்லை அச்சரப்பாக்கம் பகுதியில் மான், முயல்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் பயிர்கள் நாசமாகி விடுகின்றன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் பணியை முடித்தவர்களை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தற்போது வழங்கிய விதைகள் தரமாக இல்லை என்றும் இந்த விதைகளை போட்டால் அவை முளைக்க வில்லை இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள விதை ஆய்வாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கூறி விதைகளை காண்பித்தனர்.

கோரிக்கை

பால் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் செய்வதற்கும் இது குறித்து விவசாயிகளிடம் பேசுவதற்கும் அதிகாரிகள் வருவதில்லை கடந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை? தற்போது நடந்த கூட்டத்திற்கும் ஆவின் துறையில் இருந்து யாரும் வரவில்லை? அவர்கள் எங்கு போனார்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஆவின் துறை மீது குற்றம் சாட்டினார்கள்.

இதுபோல விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் கால்நடைகள் நோய் வந்து இறந்து போகின்றன. எனவே கால்நடை டாக்டர்கள் மாவட்டம் முழுவதும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது போன்று விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடருமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்களை எழுதி வைத்து நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story