"அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது" - எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திமுகவின் பி டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அவருடன் இணைந்து செயல்படுபவர்கள் அனைவரும் துரோகிகள். அதிமுக சரியான பாதையில் பயணிக்கிறது. மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக தொடர்ந்து இருக்கும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் உடனே தொடங்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது.
வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலபடுத்த வேண்டும். திமுக குற்றச்சாட்டுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்காமல் மக்கள் பணியில் மாவட்ட செயலாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்போராட்டங்களை குறித்து கவலை கொள்ளாமல் கட்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.