எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்


எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 6:46 PM GMT)

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கவுன்சிலர் திடீர் போராட்டம் நடத்தியது குறித்து பேசிய மேயர் மகேஷ், ‘எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கவுன்சிலர் திடீர் போராட்டம் நடத்தியது குறித்து பேசிய மேயர் மகேஷ், 'எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மாநகராட்சி கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த்மோகன் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், கவுன்சிலர்கள் மீனாதேவ், ரமேஷ், பியாசா ஹாஜிபாபு, டி.ஆர்.செல்வம், பால் அகியா, அய்யப்பன், மேரி ஜெனட்விஜிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் 5-வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக புகார் மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் அவர் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் உதயகுமாரை கவுன்சிலர்கள் சிலர் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது மேயர் மகேஷ் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேண்டுமென்றே மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று கவுன்சிலர் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே அவரிடம் பலமுறை கூறியுள்ளோம். எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளோம். ஏற்கனவே பொருட்காட்சி மைதானத்தில் மண் வைத்ததில் ஊழல் நடந்ததாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சுப்பையார்குளம் 40 ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. தற்பொழுது மணல் திருட்டு நடந்துள்ளதாக கூறியுள்ளார். அவ்வாறு மண் திருட்டு நடந்து, அதை தடுத்து நிறுத்தி இருந்தால் கவுன்சிலர் உதயகுமாரை பாராட்டி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் நோக்கில் அவர் குற்றம் சாட்டி வருகிறார். தண்ணீர் குழாயில் ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுங்கள். என் மீது கூட புகார் இருந்தால் ஆதாரத்துடன் கொடுத்தால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என் மீது நடவடிக்கை எடுத்து, பதவியில் இருந்து அகற்றி விடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாய்கள் தொல்லை

தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள குறைகள், கோரிக்கைகள் குறித்து பேசியபோது கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட தெங்கம்புதூர் பகுதி பேரூராட்சியாக இருந்தபோது கடைகள் கட்டப்பட்டது. தற்போது மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு அதற்கு அனுமதி வாங்குவதில் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட கச்சேரி ரோடு பகுதியில் நகர்ப்புற நல வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. பரசுராமன் தெரு, குளத்தூர், குளத்தூர் காலனி, பெருமாளம் குளத்தெரு, கரியமாணிக்கபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்பொழுது அங்கு போதிய அளவு மருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தேவையான வசதியை ஏற்படுத்த வேண்டும்.

நாகர்கோவில் கேப்ரோடு பகுதியில் பழைய தாலுகா அலுவலக முதல் கோட்டார் போலீஸ் நிலையம் வரை உள்ள நடைபாதையில் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை காரணம் காட்டி 34, 35, 36, 37 வார்டு பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யாமல் அந்தத் தண்ணீரை அங்கு கொண்டு செல்கிறார்கள். பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போலி பதநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதநீர் போன்றே வாசனைக்காக ரசாயனத்தை கலந்து போலி பதநீர் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தகுதியான நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவித்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பணம் கிடைக்காத பொதுமக்கள் கவுன்சிலர்களைத்தான் நாடி வருகிறார்கள். தகுதியான அனைவருக்கும் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி தீர்மானம்

இதற்கு பதில் அளித்து மாநகராட்சி மேயர் மகேஷ் கூறுகையில், 'பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வியாழக்கிழமைதோறும் மக்கள் குறைந்தீர்க்கும் முகாம் நாகர்கோவில் மாநகராட்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த முகாமில் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கேப் ரோடு பகுதியில் நடை பாதையில் கம்பி வேலி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 48- வது வார்டுக்கு உட்பட்ட கச்சேரிரோடு பகுதியில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மருந்துகள் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. 45-க்கு மேற்பட்ட பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் மண்டல அலுவலகங்கள் திறக்கப்படும்.

போலி பதநீர் விற்றால் நடவடிக்கை

ஆழ்துளை கிணறுகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போலி பதநீர் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது அரசு அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. அதுதொடர்பாக மாநகராட்சியால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story