சிமெண்டு சாலை அமைக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் வைத்தால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை


சிமெண்டு சாலை அமைக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் வைத்தால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வரும்நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வரும்நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முதற்கட்டமாக பே கோபுரம் சந்திப்பு பகுதியில் உள்ள பூத நாராயணன் கோவில் வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த சாலை பணி பேகோபுரம் சந்திப்பு பகுதி முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை, கிருஷ்ணா லாட்ஜ் முதல் அம்மணி அம்மன் கோபுரம் வரை, அம்மணி அம்மன் கோபுரம் முதல் பூத நாராயணன் கோவில் வரை என 3 பிரிவுகளாக அதிநவீன எந்திரம் மூலம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்று சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம், மின்சார துறை ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளபட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும். பே கோபுரம் சந்திப்பு பகுதி முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை நடைபெற்று வரும் பணிகள் திட்டமிட்ட படி வருகிற 23-ந் தேதிக்குள் விரைந்து முடித்து விட வேண்டும்.

புதிதாக சாலை பணிகள் அமைக்கப்பட்டு வரும் இந்த பகுதியில் சாலை அருகில் ஆக்கிரமிப்பு கடைகளை வைக்க வேண்டாம். மீறி ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கழிவறைகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிகளுக்காக செங்கம் பிரிவு சாலை சந்திப்பு மேற்கு காவல் நிலையம் அருகிலும், அடிஅண்ணாமலை சீனிவாச பள்ளி அருகிலும், வாயு லிங்கம் அருகிலும், கோசாலை இலங்கை அகதிகள் முகாம் அருகிலும், சின்னகடை வீதியிலும் பொதுப்பணித்துறை மூலமாக அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபால கிருஷ்ணன், திருவண்ணாமலை நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கலைமணி, தாசில்தார் சரளா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story