குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க. தான் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க. தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் - நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை விமர்சித்துள்ளார். தி.மு.க. ஒரு குடும்ப ஆதிக்கமிக்க ஒரு கட்சி. அந்த கட்சி இப்போது கட்டி வைக்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல தான் இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் சிதறலாம். கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க. தான். ஆனால் குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க. தான்.
எதற்கெடுத்தாலும் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்கிறார் மு.க.ஸ்டாலின். இதுவரை அந்த சர்வாதிகாரத்தை அவர் கட்சியினரிடம் காட்டியிருக்கிறாரா? கிளை நிர்வாகி முதல் மூத்த நிர்வாகிகள் வரை கட்டபஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபடுவது, சட்ட-ஒழுங்கை மீறுவது, உளறி கொட்டுவது என தி.மு.க.வில் தற்போது தமாஷான வேடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இப்படி செய்தால், யாராக இருந்தாலும், அது அமைச்சராகவே இருந்தால் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல அந்த தைரியம், துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் புலம்பி தள்ளியிருக்கிறார். அதிகாரம் இருந்தும் அவரிடம் துணிச்சல் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.