பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? - தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு வெங்கடேசன் எம்.பி டுவீட்...!


பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? - தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு வெங்கடேசன் எம்.பி டுவீட்...!
x

தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

சென்னை,

கோவையில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர்கள், ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களையும், எங்கள் போன்ற திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி பாராளுமன்றம் செல்வோம். மத்திய மந்திரிகள் ஆவோம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி கவர்னர்களாக ஆக்கி வருகிறது.

எங்களைப் போன்ற திறமை மிக்கவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக வைக்கிறேன். இதை நான் சொன்னாலும் இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அவர் கூறியதற்கு பதில் அளிக்கும் விதமாக வெங்கடேசன் எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில்,

ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.



Next Story