தண்ணீர் திருட்டு புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு


தண்ணீர் திருட்டு புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2023 1:30 AM IST (Updated: 16 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் தண்ணீர் திருட்டு புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பதாக முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் தண்ணீர் திருட்டு புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பதாக முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

முறையீட்டுக்குழு கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பூசாரிபட்டி பி.ஏ.பி. கால்வாயில் இருந்து ஆயக்கட்டு பாசனம் இல்லாத பகுதிக்கு குழாய் அமைத்து தண்ணீர் திருடுகின்றனர். இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், வழக்குப்பதிவு செய்யாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகளை போலீசார் அலைக்கழிக்கின்றனர். சிஞ்சுவாடியில் இருந்து உடுக்கம்பாளையம் செல்லும் சாலையில் அனுமதி பெறாமல் தண்ணீர் கொண்டு செல்ல பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற வேண்டும்.

உரத்தட்டுப்பாடு

கோபாலபுரம், தாவளம் போன்ற பகுதிகளில் காட்டுப்பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. கால்நடை தீவனத்திற்கு சோளம் சாகுபடி செய்தால் மயில் சேதத்தை ஏற்படுத்துகிறது.

குள்ளிச்செட்டிபாளையம் வாய்க்கால் புதர்மண்டி கிடப்பதால் கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. குளப்பத்துக்குளத்தில் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கல் நடவில்லை. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனைமலையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ராமச்சந்திராபுரம், பெரியபோது பகுதிகளில் பழைய ஆயக்கட்டு கால்வாயில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுகின்றனர். இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆய்வு செய்து நடவடிக்கை

பின்னர் சப்-கலெக்டர் பிரியங்கா பேசுகையில், பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திருட்டு குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றார்.

இதில் நேர்முக உதவியாளர் அரசகுமார், ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story