தான்சியா நாட்டில் சர்வதேச கல்வி வளாகம் திறந்தது சென்னை ஐ.ஐ.டி.


தான்சியா நாட்டில் சர்வதேச கல்வி வளாகம் திறந்தது சென்னை ஐ.ஐ.டி.
x

நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மை இடத்தில் விளங்கும் சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச நாடுகளில் தங்கள் கல்வி வளாகத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டது.

சென்னை,

நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மை இடத்தில் விளங்கும் சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச நாடுகளில் தங்கள் கல்வி வளாகத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி, தான்சியா நாட்டின் பிவேலியோ மாவட்டத்தில் சென்னை ஐ.ஐ.டி. சான்சிபார் கல்வி வளாகம் நிறுவப்பட்டு உள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி, தான்சியாவில் நேற்று நடைபெற்றது. தான்சியா அதிபரும், புரட்சிகர கவுன்சில் தலைவருமான ஹூசைன் அலி மின்யி கல்வி வளாகத்தை திறந்து வைத்தார்.

இந்த விழாவில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, கிண்டி வளாகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவின் உயர்தர கல்வி முறையை சர்வதேச அரங்கிற்கு எடுத்து செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக, தான்சியா நாட்டின் சான்சிபாரில் சென்னை ஐ.ஐ.டி. சான்சிபார் கல்வி வளாகம் நிறுவப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவனத்தை வெளிநாடுகளில் நிறுவி உள்ளன. அதேபோல், இந்தியாவிலும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கல்வி நிறுவனத்தை தொடங்கி உள்ளன. ஆனால், முதல் முறையாக ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் சார்பில், சென்னை ஐ.ஐ.டி. சர்வதேச அரங்கில் ஓர் கல்வி வளாகத்தை நிறுவி உள்ளது. விரைவில், டெல்லி ஐ.ஐ.டி. அபுதாபியில் தங்கள் கல்வி வளாகத்தை நிறுவ உள்ளது.

தற்போது, இங்கு பி.எஸ். டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு, எம்.டெக் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதில், 50 சதவீதம் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த மாணவர்களும், 50 சதவீதம் இந்திய மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இந்த கல்வி நிறுவனத்துக்கான மொத்த நிதியையும், தான்சியா நாட்டின் அரசாங்கமே ஏற்றுள்ளது.

இந்த செயல்திட்டம் சிறப்பாக அமைந்தால், உலகின் மற்ற நாடுகளிலும் சென்னை ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தை தொடங்க ஆய்வு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story