இலவம்பாடி அரசுப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாததால் மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்து காயம் ஏற்படுத்திய இலவம்பாடி அரசுப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
4 மாணவிகள் காயம்
இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில், இலவம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் தீபலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கம்மவார்பாளையத்தை சேர்ந்த 4 மாணவிகளின் இடது தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்காயங்கள் ஏற்பட்டு அந்த பகுதி வீக்கம் அடைந்தது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவிகளின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் அவர்களை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆசிரியை பணியிடை நீக்கம்
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஆசிரியை தீபலட்சுமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி இதுபற்றி உரிய விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி இலவம்பாடி அரசுப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர்கள், காயமடைந்த 4 மாணவிகள் மற்றும் ஆசிரியை தீபலட்சுமி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். முதற்கட்டமாக ஆசிரியையிடம் இதுபற்றி விளக்கம் பெறப்பட்டது. பின்னர் மாணவர்கள், ஆசிரியை தீபலட்சுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவிகளை அடித்து காயம் ஏற்படுத்திய ஆசிரியை தீபலட்சுமியை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.