முறைகேடாக வைக்கப்பட்டுள்ளவிளம்பர தட்டிகள்


முறைகேடாக வைக்கப்பட்டுள்ளவிளம்பர தட்டிகள்
x

உடுமலையில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

திருப்பூர்

தளி,

உடுமலையில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

விளம்பர தட்டிகள்

புதிதாக விற்பனைக்கு வருகின்ற பொருள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களை சென்று அடைவதில் விளம்பரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.மக்கள் நெருக்கம், நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வாகனம் மற்றும் சுவர் விளம்பரம், டிஜிட்டல் முறையில் விளம்பரம், சுவரொட்டி, பதாகைகள், துண்டு பிரசுரங்கள், தட்டிகள், ஒலிபெருக்கி என பல வகையில் விளம்பரப்படுத்தப்படுகிறது. இதனால் ஈர்க்கப்பட்ட பொதுமக்களும் தேடிச் சென்று பொருளை வாங்கும் மனநிலைக்கு வந்து விடுகின்றனர்.

அந்த வகையில் உடுமலை நகருக்குட்பட்ட பிரதான மற்றும் இணைப்பு சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, ஊரக, மாவட்ட, மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் நிறுவனம் ஒன்று விளம்பர தட்டிகளை முறைகேடாக அமைத்து உள்ளது. அதன்படி மின்கம்பங்கள், டெலிபோன் மற்றும் விளக்கு கம்பங்கள், மத்திய பஸ் நிலையத்தில் நடைபாதையில் உள்ள இரும்பு கம்பிகள் போன்றவற்றில் விளம்பர தட்டிகளை அதிக அளவில் அமைத்து உள்ளது.

பழுதை சரி செய்வதில் சிக்கல்

இதனால் எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண விளம்பர தட்டிகள் மயமாக காட்சி அளித்து வருகிறது. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவும். ஆனால் மின் விபத்து மற்றும் பழுது ஏற்படும் போது மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள தட்டிகளால் பணியாளர்கள் பழுதை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அதே போன்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவனச்சிதறல்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சாலையை கடக்க முயலும் பொதுமக்களும் சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தனி ஒரு நிறுவனத்தின் சுயலாபத்திற்காக விலைமதிப்பற்ற உயிரை பறிக்கும் வகையில் தட்டிகள் கட்டப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

அபராதம் விதிக்க வேண்டும்

அது முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா இல்லையா என்பதும் சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளும் நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது.எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் அருகே அமைந்துள்ள கிராமப்புற சாலையில் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை உடனடியாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும். அத்துடன் தட்டிகளை முறைகேடாக அமைத்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.



Next Story