தம்பதியை சட்டவிரோத காவலில் அடைத்து சித்ரவதை:போலீஸ் அதிகாரிகள் மீதான மனித உரிமை மீறல் வழக்கை விசாரித்து முடிக்க கெடு- கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தம்பதியை சட்டவிரோத காவலில் அடைத்து சித்ரவதை:போலீஸ் அதிகாரிகள் மீதான மனித உரிமை மீறல் வழக்கை விசாரித்து முடிக்க கெடு- கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து தம்பதியை சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது தொடரப்பட்டுள்ள மனித உரிமை மீறல் வழக்கை 8 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


சட்டவிரோத காவல்

மதுரை அண்ணாநகரை சேர்ந்த பாலகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் சில நிறுவனங்களை நடத்தி வந்தேன். கடந்த 2010-ம் ஆண்டில் எனது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய கணேஷ்குமார் என்பவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். அவர் திடீரென நிறுவனத்தின் ஆவணங்கள், காசோலைகளை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார். இதில் பல ஆவணங்களை எனக்கு தெரியாமலேயே மாற்றி முறைகேடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதற்கு மாறாக, அப்போதைய மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த இளங்கோவன் (தற்போது கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார்), தற்போதைய கீரைத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பெத்துராஜ், தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்) ஆகிய 4 பேரும் எங்கள் நிறுவனத்தில் மோசடி செய்தவர்களுடன் கூட்டு சேர்ந்து, என்னையும், என் மனைவியையும் போலீஸ் நிலையத்தில் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்தனர். அத்துடன் இரவு முழுவதும் எங்களை தாக்கி சித்ரவதை செய்தனர்.

மனித உரிமை மீறல்

எங்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தையும், பெயர் மற்றும் தொகை எழுதாமல் கையெழுத்திடப்பட்ட காசோலைகளையும் பறித்துக் கொண்டனர். எனது தாயாரின் பெயரில் இருந்த வங்கிக்கணக்கில் இருந்து பல லட்ச ரூபாயை மோசடியாக பெற்றனர்.

இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போலீசாரால் பாதிக்கப்பட்டு 13 வருடங்கள் ஆன பிறகும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல் வழக்கை விரைந்து விசாரித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 மாதத்தில் முடிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "போலீஸ் அதிகாரிகள் இளங்கோவன், பெத்துராஜ், சர்மிளா, முனீசுவரன் ஆகியோர் சேர்ந்து, மனுதாரரையும், அவரது குடும்பத்தினரையும் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டு துறை ரீதியான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

அதனை தொடர்ந்து, வழக்கு நிலவரம் குறித்து நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் விளக்கம் கேட்ட போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முதன்மை வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் உளளது என்று தெரிவிக்கப்பட்டது.

முடிவில், இடைக்கால மனுக்களை விரைவில் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை 8 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழ்கோர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story