'நான் தான் நிதியமைச்சர்' முகநூல் பயோவில் பிடிஆர் சூசக தகவல்


நான் தான் நிதியமைச்சர் முகநூல் பயோவில் பிடிஆர் சூசக தகவல்
x
தினத்தந்தி 11 May 2023 4:43 AM GMT (Updated: 11 May 2023 5:41 AM GMT)

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் தனது பயோவை மாற்றி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் நீக்கப்படுவார் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் தனது பேஸ்புக் பயோவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறையில் தொடர்வதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்களை பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வெளியிட்டிருந்தனர். இந்த ஆடியோக்கள் கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்த ஆடியோ நான் பேசியது இல்லை என்று பிடிஆர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதி இலாகா பறிக்கப்பட்டு தங்கம் தென்னரசு நிதியமைச்சராக்கப்படுவார் என செய்திகள் வெளியானது. இருப்பினும் பிடிஆர் மீது உள்ள க்ளீன் இமேஜ், சிறப்பாக நிதித்துறையை மேலாண்மை செய்து போன்ற அம்சங்கள் அவரது சிறப்புகளாக பார்க்கப்படும் நிலையில், அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படமாட்டார். அதற்கு பதிலாக தகவல் தொழில்நுட்பத்துறை இலாகா அவருக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் எந்த காரணத்திற்காக நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் மாற்றப்படுகிறார். அந்த துறையில் அவர் செய்த தவறுகள் என்ன? என்பதை முன்வைத்து 'பிடிஆர் உடன் எப்போதும்' என்ற ஹேஷ்டேக்கில் பிடிஆருக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பலர் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு ஆடியோ விவகாரத்திற்காக மாற்றினால் அது மீண்டும் அரசியல் ரீதியான சர்ச்சைகளை உண்டாக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சராக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கு பின்னர் தமிழ்நாடு அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள இலாகா மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி தொழிதுறை அமைச்சராக டிஆர்பி ராஜாவும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், பால் வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜூம் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் தனது பயோவை மாற்றி உள்ளார். அதில் "நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர், தமிழ்நாடு, கூட்டாட்சி உணர்வுள்ள திராவிடன்" என பதிவிட்டு தன்னிடம் இருந்து நிதித்துறை பறிக்கவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.


Next Story