தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்


தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -  ஜி.கே.வாசன்
x

தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஊதிய உயர்வு கிடைக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை,

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் செயல் பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் கடந்த 2014-ம் ஆண்டு ஊதிய உயர்வு திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு 2018-ம் ஆண்டும், 2022-ம் ஆண்டும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு திருத்தி அமைக்கப்படவில்லை.

இதன் காரணமாக தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள். இது சம்பந்தமாக தொழிலாளர்கள் அடங்கிய தொழிற்சங்கங்கள் பலமுறை தனியார் சர்க்கரை ஆலை கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் இது சம்பந்தமாக தொழிலாளர்கள் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கு 8 பேர் கொண்ட குழு அமைத்தது.

மேலும் கடந்த 9.3.2023 அன்று தனியார் சர்க்கரை ஆலை கூட்டமைப்பானது தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக நல்ல முடிவு விரைவில் கிடைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு வழி வகுக்க வேண்டும். மேலும் தமிழக அரசும், தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஊதிய உயர்வு காலம் தாழ்த்தாமல் கிடைக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story