செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் தமிழக அரசால் எடுக்கப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய ஒரு வகை காய்ச்சல் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் சாதாரணமாக குளிர்காலம் மற்றும் பருவகாலம் நிறைவடையும் சூழ்நிலையில் ஏற்படக்கூடிய பருவகால நோய் தொற்று ஆகும். இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, உடம்பு வலி போன்ற வகைகள் இருக்கும். ஏற்கனவே இத்தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இதன் தொடர்ச்சியாக முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்த நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அந்தந்த பகுதிகளிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களில் காய்ச்சல் உள்ளவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

மேலும், இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் வழங்கப்படுகிறது. மேலும் தேவைப்படும் நபர்களை மேல்சிகிச்சை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் 16 ஆர்.பி.எஸ்.கே மருத்துவக்குழுக்கள் இந்த முகாம்களுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மருத்துவ குழுக்களால் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளை பரிசோதித்து காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சை தேவைப்படும் மாணவ -மாணவிகளை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் நடத்தப்படும் பள்ளியின் உள்ளேயும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் டொமஸ்டிக் பிரீடிங் செக்கர்ஸ் மூலம் ஏடீஸ் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளும், புகை மருந்து தெளிக்கப்பட்டும் வருகிறது.

முகாமில் செங்கல்பட்டு முழுவதும் காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் தேவைகேற்ப தொடர்ந்து நடைபெறும். இது தவிர காய்ச்சல், இன்புளூயன்சா போன்ற நோய்கள் அறிகுறியுடன் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை உடனடியாக சுகாதார துறைக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு எடுத்து வரும் பருவ கால காய்ச்சல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவும்.

இவ்வாறு அதில் கூறபபட்டுள்ளது.


Next Story