ஜமாபந்தியில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு


ஜமாபந்தியில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x

ஜமாபந்தியில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயங்கொண்டம் வட்டத்திற்கான ஜமாபந்தி ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் தா.பழூர் உள்வட்டம், இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிப்பெருமாள்நத்தம், இடங்கண்ணி, உதயநத்தம் மேல்பாகம் மற்றும் கீழ்பாகம், அணைக்குடம் (பொற்பதிந்தநல்லூர் உள்பட), தா.பழூர், கோடங்குடி வடபாகம் மற்றும் தென்பாகம், நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய 15 கிராம மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். மீதமுள்ள 260 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணவும், கிராம கணக்குகள் தொடர்பான கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கணக்கு பதிவேடுகளை முறையாக பதிவு செய்து பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயபாஸ்கர், தாசில்தார் துரை மற்றும் துைண தாசில்தார்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் வட்டத்தில், தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் இன்று(புதன்கிழமை) சுத்தமல்லி உள்வட்டத்திற்கு உட்பட்ட மணகெதி, உல்லியக்குடி, வெண்மான்கொண்டான் மேல்பாகம் மற்றும் கீழ்பாகம், பருக்கல் மேல்பாகம் மற்றும் கீழ்பாகம், கோவிந்தபுத்தூர், நடுவலூர் மேல்பாகம் மற்றும் கீழ்பாகம், சுத்தமல்லி, கீழநத்தம், அம்பாபூர், உடையவர்தீயனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் வடபாகம் மற்றும் தென்பாகம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.


Next Story