வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்


வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.

முன்பு மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக (லைப் டேக்ஸ்) 8 சதவீதம் பெறப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அதாவது ரூ.1 லட்சம் வரை விற்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இனி 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கு 12 சதவீதம் வரியும் வசூலிக்கப்படும்.

அதுபோல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டு அடுக்கு முறையில், அதாவது ரூ.10 லட்சம் வரையிலான ஒரு காருக்கு 10 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீதம் வரியும் பெறப்பட்டு வந்தது.

அது தற்போது நான்கு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள கார்களுக்கு 12 சதவீதம் வரியும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 20 சதவீதம் வரியும் இனி வசூலிக்கப்படும்.

இதுதவிர பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவைகளும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆம்னி பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவைகளுக்கும் வரிவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வாகனத்துறையைச் சேர்ந்த சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

விருதுநகர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ராஜா:-

ஒரு முறை லாரியில் சரக்கு எடுத்து சென்றால் என்ன காரணத்திற்கென்றே தெரியாமல் போலீசார் அபராதம் விதித்து ஆன்லைனில் ரசீது மட்டும் அனுப்புகின்றனர். விருதுநகரில் இருந்து சேலம் சென்று வர சாலை சுங்கச்சாவடி கட்டணம் மட்டும் ரூ.2,500 செலுத்த வேண்டி உள்ளது. டீசல் விலை உயர்வை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஏற்கனவே வாகன வரி விதிப்பால் லாரி தொழில் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள வாகன வரி உயர்வு என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழில் ஏற்கனவே நலிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த வரி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தான் செயல்படுகிறது.

ராஜபாளையம் டாக்சி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கண்ணன்:-

ஏற்கனவே மோட்டார் தொழில் நலிவடைந்துள்ள நிலையில் தற்போது பெட்ரோல், டீசல், சுங்கவரி கட்டணங்கள் உயர்ந்துள்ளது. வாகன பதிவு கட்டணம், சான்றிதழ், பெயர் மாற்றம் மோட்டார் சட்ட திருத்தம் உயர்ந்துள்ளது. வெளிமாநிலம் செல்வதற்கு கட்டணம் வரி செலுத்த வேண்டியது உள்ளது. டூரிஸ்ட் வாகனங்களுக்கு ஆயுள் வரி வசூலிக்கப்படுகிறது. தனியார் கார் வைத்திருப்பவர்கள் தற்போது வாடகைக்கு அனுப்புவதால் எங்களைப் போன்ற டூரிஸ்ட் கார் வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தனியார் கார் வைத்திருப்பவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்றால் அவர்களுக்கு கட்டணம் கிடையாது. இதை அரசு கவனம் செலுத்தி தடுக்க வேண்டும். அதேபோல ஆயுள் வரியை ஆண்டுவாரியாக மாற்றம் செய்ய வேண்டும்.

சேசபுரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் அழகு திருப்பதி:-

ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. தற்போது வாகனங்களின் வரியும் உயர்ந்து விட்டது. வாகனங்களின் வரி உயர்வால் அனைத்து பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

வரி உயர்வால் எண்ணற்ற பேர் வாகனத்தொழிலை விட வேண்டிய நிலை ஏற்படும்.

சிவகாசியை சேர்ந்த கார் விற்பனையாளர் கோபி:- வாகனங்களின் வரி உயர்வால் கார் விற்பனை எந்த வகையிலும் குறையாது. புதிய வரி விதிப்புக்கு முன்னர் பலர் புதிய கார்கள் வாங்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் பழைய கார்களின் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

விருதுநகர் வக்கீல் கஜேந்திரன்:-

மாநில அரசு திடீெரன வாகன வரி உயர்த்தியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்காக வாகன வரி விதிப்பதாக சொல்லப்பட்டாலும் தேசிய நெடுஞ்சாலை பல்வேறு வழித்தடங்களில் பயன்பாட்டில் உள்ள நிலையில் அதற்கு மத்திய அரசு பராமரிப்பு செலவை ஏற்று கொண்டுள்ள நிலையில் மாநில அரசுக்கு அதில் பெரும் செலவு ஏதும் ஏற்பட போவதிலை.

இந்தநிலையில் வாகன வரி உயர்வு தவிர்க்க கூடியது தான். மேலும் வாகன வரி உயர்வு வாகனத்திற்கு விதிக்கப்பட்டாலும் மறைமுகமாக அது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். சாமானிய மக்களை கூட பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story