மலைவாழ் பகுதி மக்களுக்கு பாதிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


மலைவாழ் பகுதி மக்களுக்கு பாதிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

மலைவாழ் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒரு நாட்டின் வளம் காட்டு வளத்தில் அடங்கியுள்ளது; காடுகளின் வளர்ச்சியால் மனித இனம் நன்மை அடைகிறது என்றாலும், இயற்கையோடு இயற்கையாக வன விலங்குகளுக்கிடையே வாழ்ந்து கொண்டு இருக்கும் மலைவாழ் மக்களின் நலன்கள் பாதுகாப்பப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், கர்நாடாகவிலுள்ள பந்திப்பூர் மற்றும் கேரளாவில் உள்ள முத்தங்கா ஆகிய பகுதிகளை புலிகள் காப்பமாக மத்திய அரசு அறிவித்தது. இதன் விளைவாக, இதன் அருகில் உள்ள கிராமங்கள் இடைப்பகுதியாக (Buffer Zone) அறிவிக்கப்பட்டு, அங்கு வணிகச் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே சமயத்தில், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், இது குறித்த வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து உயிரியல் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கிராமங்களில் எந்தவிதமான நிரந்தர கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என்றும், ஏற்கெனவே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் ஆறு மாத காலத்திற்குள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கினை மற்றொரு வழக்கோடு சேர்த்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்துள்ளதோடு, சுற்றுச்சூழல் கூர் உணர்வுடைய இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, காட்டு வளத்தை மட்டுமே சார்ந்து பல்லாண்டுகளாக வனப் பகுதியின் எல்லையை ஒட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் மலைவாழ் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் கேரள அரசு தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்காதது மலைவாழ் மக்களிடையே மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தங்களது வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனையை, வலியை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால் மலைவாழ் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து மலைவாழ் மக்களின் வலியைப் போக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. இதனை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

எனவே, மேற்படி தீர்ப்பினால் மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி, உயிரியல் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களில் நிரந்தர கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story