ஓவர்டைம் நேரத்தை அதிகரித்து அமல்படுத்த வேண்டும்
ஓவர்டைம் நேரத்தை அதிகரித்து அமல்படுத்த வேண்டும்
திருப்பூர்
பின்னலாடை நிறுவனங்களில் காலாண்டுக்கான ஓவர்டைம் நேரத்தை அதிகரித்து அமல்படுத்த வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரிடம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்தார்.
கைத்தறி துணி நூல்துறை அமைச்சர்
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் ஜவுளி தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மை செயலாளர் டி.பி.யாதவ், ஜவுளித்துறை கமிஷனர் வள்ளலார் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஓவர்டைம் நேரம் அதிகரிப்பு
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் கூறியதாவது:-
காலாண்டுக்கான ஓவர்டைம் நேரத்தை 75 மணி நேரத்தில் இருந்து 145 மணி நேரமாக உயர்த்த வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் மராட்டிய மாநிலத்திலும், சமீபத்தில் கர்நாடக மாநிலத்திலும் ஓவர்டைம் நேரம் அதிகப்படுத்தி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் அதிகப்படுத்த வேண்டும்.
நீடித்த நிலையான பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு காற்றாலை மின்சாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு உள்ளிட்டவைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பின்னலாடை தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வசதி தேவையாக உள்ளது. இதற்காக அரசு நிலத்தை தேர்வு செய்து குடியிருப்புகளை கட்டிக்கொடுத்து உதவ வேண்டும்.
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி
திருப்பூரில் ஏற்றுமதியை மேம்பாடு செய்யும் வகையில் ஏற்றுமதி மையம், திறன்வளர்ப்பு பயிற்சி மையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடியை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளது. கூடுதலாக மேலும் ரூ.10 கோடியை ஒதுக்கீடு செய்தால் ஒரே இடத்தில் பயிற்சி மையம் உள்ளிட்ட பின்னலாடை தொழில் அமைப்புகளை மேற்கொள்ளவும், அவற்றை பார்வையிடவும் வசதியாக அமையும்.
பின்னலாடை தொழிலுக்கு தேவையான எந்திரங்களை வாங்கும்போது தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை (டப்) மத்திய அரசு வழங்குகிறது. இதை காரணம் காட்டி தமிழக அரசு நிதி எதுவும் வழங்கவில்லை. ஆனால் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் மத்திய அரசு நிதி வழங்கினாலும், மாநில அரசும் அதன் பங்குக்கு நிதி வழங்கி உதவி செய்கிறது. அதுபோல் தமிழக அரசும் நிதி வழங்கி உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-