தொட்டபெட்டா வன சோதனைச்சாவடியில் 'பாஸ்ட் டேக்' நடைமுறை அமல்

தொட்டபெட்டா வனத்துறை சோதனைச்சாவடியில் பாஸ்ட் டேக் நடைமுறையை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார்.
ஊட்டி
தொட்டபெட்டா வனத்துறை சோதனைச்சாவடியில் பாஸ்ட் டேக் நடைமுறையை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார்.
நீண்ட வரிசையில் வாகனங்கள்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 2,623 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கிறது. இங்குள்ள தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, மாநில எல்லைகள், அணைகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசிக்க ஆண்டுக்கு 30 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். குறிப்பாக சீசன் காலங்களில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் முன்பு சோதனைச்சாவடியில், வாகன நிறுத்த கட்டணம் செலுத்திய பின்னரே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு கட்டணம் செலுத்த காத்திருப்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பிற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தாமதம் ஆகிறது.
பாஸ்ட் டேக் திட்டம்
இதை கருத்தில் கொண்டு வனத்துறை சார்பில் தொட்டபெட்டா சோதனைச்சாவடியில் பாஸ்ட் டேக் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கவுதம் கூறியதாவது:-
தொட்டபெட்டாவில் வனத்துறை சோதனைச்சாவடியை தொட்டபெட்டா சூழல் சுற்றுலா ஆதிவாசி குழு பராமரித்து வருகிறது. அதிக சுற்றுலா பயணிகள் வரும் போது, நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பது போல், இங்கு வாகனம் வந்தவுடன் பாஸ்ட் டேக் மூலம் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் சோதனைச்சாவடியில் நிற்க வேண்டியதில்லை.
தமிழக வனத்துறையில் முதன் முறையாக இந்த திட்டம் ஊட்டியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் அவலாஞ்சி, பைக்காரா சோதனைச்சாவடியிலும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி வன பாதுகாவலர் (தலைமையிடம்) தேவராஜ், நீலகிரி வடக்கு வனச்சரகர் சசிக்குமார் உடனிருந்தனர்.
------
(பாக்ஸ்)
வாகன நிறுத்த கட்டணம் அதிகரிப்பு
தொட்டபெட்டாவில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனத்திற்கு ரூ.10, காருக்கு ரூ.20, ஆட்டோவுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் பாஸ்ட் டேக் திட்டம் அமலுக்கு வந்து உள்ள நிலையில், வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி இருசக்கர வாகனத்திற்கு ரூ.20, ஆட்டோவுக்கு ரூ.30, காருக்கு ரூ.40, பஸ்சுக்கு ரூ.70 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால், இந்த கட்டண உயர்வு சூழல் சுற்றுலா குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தான் உபயோகமாக இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.






