மத்திய 'பட்ஜெட்டில்' இறக்குமதி வரி அதிகரிப்பு-தங்கம் விலை உயர்வுக்கு காரணமா?


மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு-தங்கம் விலை உயர்வுக்கு காரணமா?
x

1920-ம் ஆண்டில் ரூ.21-க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது. 103 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 96 மடங்கு விலையேறி இருக்கிறது. திருமணம், கோவில் கொடைகள் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் தங்க நகைகள் அணிவதை பலரும் கவுரவமாக கருதுவதால் அதன் மீதான மோகம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து உயர்வை கண்டாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாற்றில் இடம் பிடித்து வருகிறது.

திருச்சி

பதுக்கல்

இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு வெளியான உடனேயே உள்நாட்டில் தங்கத்தை மொத்த வியாபாரிகள் அதிகளவில் பதுக்கி இருக்கலாம் என்று பரபரப்பு வெளியாகி உள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை எகிறியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இல்லத்தரசிகளை கதிகலங்க செய்துள்ளது.

தங்கம் விலை 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் வியாபாரிகள், இல்லத்தரசிகள் அதுபற்றி தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கடத்தலுக்கு வழிவகுக்கும்

தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முக்கிய ஆலோசகர் எல்.கே.எஸ். சையது அகமது:-

பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிவது பாரம்பரிய கலாசாரமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. உள்நாட்டில் தங்க உற்பத்தி இல்லை என்றாலும் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு தோராயமாக 600 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி சுங்க வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தோம். ஆனால் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரியை குறைப்பதற்கு பதிலாக உயர்த்தி இருப்பது வேதனைக்குரியது. தங்கம் விலை அதிகரிப்பு சட்டவிரோத கடத்தலுக்கு வழிவகுத்து விடும்.

தற்போது தங்க நகை உயர்வு திருமண வீட்டாரை கஷ்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி உள்ளது. எனவே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று வரியை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் தமிழ்நாட்டு பெண்களின் அன்பும், ஆதரவும் அவருக்கு கிடைக்கும்.

கவரிங் நகைகள்

திருச்சியை சேர்ந்த இல்லத்தரசி ராணி:- தங்கம் விலை தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டே வருகிறது. நடுத்தர மக்களின் தங்க நகை வாங்கும் கனவு எட்டாக்கனியாக மாறி விட்டது. இதனால் பலரும் கவரிங் நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விலை உயர்வால் தங்கம் வாங்குவது தற்போது குறைந்து வருகிறது. 5 பவுன் தங்கம் வாங்கும் நிலையில் இருந்து 3 பவுன் வாங்கினால் போதும் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனர். தங்கம் விலை உயரும் போது ஆயிரக்கணக்கில் செல்கிறது. ஆனால் விலை குறையும் போது ரூ.10, ரூ.20 என தான் குறைகிறது. இப்படியே சென்றால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை.

வரதட்சணை

திருவெறும்பூர் கடை வீதியில் பூக்கடை வைத்திருக்கும் ராதிகா:- எனது கணவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு திருமண வயதில் மகள் உள்ளார். தற்போது திருமணம் என்றாலே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் 15 சவரன் முதல் 20 சவரன் வரதட்சணை கேட்கிறார்கள். ஆனால் தற்போது தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் ஒரு கிராம் தங்கம் எடுப்பதற்கு 3 மாதம் உழைக்க வேண்டி உள்ளது. ஒரு நாள் பூ விற்பதின் மூலம் எங்களுக்கு ரூ.300 தான் கிடைக்கும். தங்கம் விலை 'ராக்கெட்' வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றால் ஏழை பெண்களை எப்படி திருமணம் செய்து கொடுக்க முடியும்.

திருமணம், வளைகாப்பு

பெட்டவாய்த்தலையை சேர்ந்த அனிதா:- தங்கம் விலை அதிகரித்தாலும் திருமணம், வளைகாப்பு, பொங்கல் சீர் என்று பல்வேறு தேவைக்காக அதனை வாங்க வேண்டியுள்ளது. இதனால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சிலர் இன்னும் விலை ஏறிவிடுமா என்ற அச்சத்தால் கையில் இருக்கும் பணத்தை கொண்டு நகைகளை வாங்க செல்கின்றனர். ஆனால் கிராமப்புறத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள், விவசாய பணியாளர்கள் தங்கம் வாங்குவது அவர்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. எனவே தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் நடுத்தர மற்றும் கிராமத்தில் உள்ள விவசாயக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

வரியை குறைக்க வேண்டும்

தொட்டியம் புதுத்தெருவை சேர்ந்த சாந்தி:- தங்கம் விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் ஈர்க்கக்கூடிய தங்கம் இன்று ஒரு கிராம் 6 ஆயிரத்தை நோக்கிச்செல்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் ஒரு குடும்பத்தின் எதிர்கால ஆதாரமாக விளங்கக்கூடிய தங்கத்தை சிறுக சிறுக வாங்கும் எங்களை போன்றவர்களுக்கு தங்கம் ஒரு எட்டாக்கனியாக ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்திற்கு விற்ற தங்கம் அடுத்த ஆண்டு ரூ.37 ஆயிரம் வரை விலை குறைந்தது மகிழ்ச்சியாக இருந்த நிலையில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்துக்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மேலும் உயராமல் இருக்க மத்திய- மாநில அரசுகள் தங்கத்தின் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகையை வாங்க முடியுமா?

தாளக்குடியை சேர்ந்த அமர்த்தியா:- எங்களை போன்ற இல்லத்தரசிகள் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவ்வப்போது கஷ்டம் வரும் நேரத்தில் கை கொடுக்குமே என்ற நோக்கில் சிறுக சிறுக பணத்தை சேமித்து தங்க நகைகளை வாங்குவோம். முந்தைய காலகட்டங்களில் பொருளாதார வீக்கம் இல்லையென்றாலும் நகைகளை சற்று எளிதில் வாங்கிவிடலாம். ஆனால் தற்போது தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்வதை பார்க்கும் போது தங்க நகையை வாங்க முடியுமா என்றே தெரியவில்லை. இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலையால் குடும்பத்தின் எதிர்காலத்தை சமாளிக்க வேறு எதாவது வழியில்தான் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

கனவாக மாறும்

துறையூரை சேர்ந்த மல்லிகா:- தமிழகத்தில் தற்போது தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. தற்போது சுபமுகூர்த்த தினங்கள் அதிகமாக உள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்யும் போது பெற்றோர் தடுமாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் திருமண சீர்வரிசை செய்யும்போது கூடுதல் சுமை ஏற்படும். தங்கத்தின் விலை குறையவில்லை என்றால் தங்கம் என்பது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு கனவாக மாறும் அபாயம் உள்ளது.

தங்கம் விலை மேலும் உயரும்

திருச்சி நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன்:- கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. மேலும் தங்க நகைகள் இறக்குமதி வரியும் அதிரடியாக கூட்டப்பட்டது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து, ரூ.5,505-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிராம் ரூ.5,300 ஆக குறைந்தது. வருகிற 10 நாட்களுக்கு தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். அதன் பிறகு தங்கத்தின் விலை சீரடையும். டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதால், நமக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளதால், தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story