இந்தி திணிப்பு: தமிழகம் ழுழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் ழுழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
சென்னை,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது.
இதனை எதிர்த்து தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இதுபோன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
- திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி எம்.எல்.ஏவுமான எஸ். சந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏவுமான டி.ஜ.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை தாக்கினர்.
- ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு ஏற்பாட்டில், தி.மு.க.இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ தலைமையில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அவைத் தலைவர் முகமது சகி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கி பேசினார்.
- அரியலூர் அண்ணா சிலை அருகில் தி.மு.க மாவட்ட இளைஞரணி சார்பாக இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் தெய்வ இளைய ராஜன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
- மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு இந்தி திணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவதாஸ், மருது ஆகியோர் முன்னிலை வைத்தனர்.