ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை


ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்து நிவாரணத்தொகை வழங்க இறந்த கல்லூரி மாணவரின் தாயாரிடம் ரூ.7ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி

விபத்து நிவாரணத்தொகை வழங்க இறந்த கல்லூரி மாணவரின் தாயாரிடம் ரூ.7ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

விபத்து நிவாரணத்தொகை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பூதிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவருடைய மூத்த மகன் சித்தலிங்கம். இவர் சேலத்தில் சிக்கன் கடை நடத்தி வந்தார். கல்லூரி மாணவரான இளைய மகன் பரமசிவம் பி.எஸ்சி. அக்ரி 4-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் வந்த பரமசிவம், அண்ணனின் சிக்கன் கடைக்கு சென்று 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.

இதனால் பரமசிவத்தின் தாயார் ராணி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தொகை பெற அப்போது பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த மணிமேகலையிடம் விண்ணப்பித்தார். அப்போது தாசில்தார் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது அசல் குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை ஆகியவற்றை ராணியிடம் இருந்து அவர் வாங்கி வைத்து கொண்டார்.

ரூ.7 ஆயிரம் லஞ்சம்

இதைதொடர்ந்து ரூ.1 லட்சத்து 2500 விபத்து நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. அதன்பின்பு ராணி அசல் குடும்ப அட்டை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டையை வழங்குமாறு தாசில்தாரிடம் கேட்டுள்ளார். அப்போது மீதி உள்ள ரூ.10 ஆயிரத்தை கொடுத்தால் தான் அவற்றை திருப்பி தர முடியும் என்று தாசில்தார் கூறியுள்ளார். இறுதியாக ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சிடைந்த ராணி இது குறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் ராணி, தாசில்தார் மணிமேகலையிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரை கைது செய்தனர்.

3 ஆண்டு சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கு தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில் குற்றம் உறுதியானதால் மணிமேகலைக்கு ஊழல் தடுப்பு சட்டப்படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கணேசன் நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story