பஸ் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பென்னாகரம் அருகே 3 வயது சிறுமியை கொலை செய்ய முயன்ற பஸ் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
பென்னாகரம் அருகே 3 வயது சிறுமியை கொலை செய்ய முயன்ற பஸ் டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
சிறுமி மீது தாக்குதல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் என்கிற பகவதி (வயது 46) தனியார் பஸ் டிரைவர். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் இதற்கு இடையூறாக இருப்பதாக கருதி அந்த பெண்ணின் 3 வயது சிறுமியை கடந்த 2015- ம் ஆண்டு மார்ச் மாதம் முனியப்பன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்த குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
7 ஆண்டு சிறை
இது தொடர்பான புகாரின் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார், முனியப்பன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் முனியப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
இதையடுத்து முனியப்பனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.