கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் சிறை தண்டனைநெசவாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நெசவாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம், நம் நாட்டின் கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 என்கிற சட்டத்தை இயற்றி உள்ளது.
இந்த சட்டப்பிரிவின் 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
தீவிரமாக ஆய்வு
இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின்போது கைத்தறிக்கு என்று ஒதுக்கப்பட்ட மேற்கூறிய ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும்.
சிறை தண்டனை
நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கவும். இது தொடர்பாக கூடுதல் விளக்கங்கள் பெறுவதற்கு சென்னையில் இயங்கி வரும் துணை இயக்குநர் அமலாக்கம் அலுவலகத்தையோ அல்லது 044-25346295 என்கிற தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.