ஈரோட்டில் 7 போலீஸ் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு பணி இடமாற்றம்


ஈரோட்டில் 7 போலீஸ் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 18 Oct 2023 3:13 AM IST (Updated: 18 Oct 2023 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 7 போலீஸ் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு பணி இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஈரோடு

ஈரோட்டில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பணி இடமாற்றம்

ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் என ஈரோடு மாவட்டத்தில் 5 போலீஸ் துணை கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, குற்ற சம்பவங்கள், சட்ட விரோத செயல்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஈரோடு டவுன் போலீஸ் துணை கோட்டத்துக்குட்பட்ட 7 போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசாரை கூண்டோடு பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பாபு, சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அருண், வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மெய்யழகன், ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பாலாஜி, மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய செந்தில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய வடிவேல், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய நித்யானந்தம் ஆகியோர் டவுன் போலீஸ் துணை கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நியமனம்

இதேபோல் 7 போலீஸ் நிலையங்களுக்கும் தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சுப்பிரமணி கருங்கல்பாளையத்துக்கும், வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய முருகேசன் சூரம்பட்டிக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பாலமுருகன் ஈரோடு டவுனுக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஆனந்தகுமார் வீரப்பன்சத்திரத்துக்கும், ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஸ்ரீதர் மொடக்குறிச்சிக்கும், ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சதாம் உசேன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அம்மாபேட்டை

இதேபோல் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சித்தையசாமி, பவானி போலீஸ் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பவானி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ் ஏட்டு ஞானவேல் அம்மாபேட்டை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டாக நியமிக்கப்பட்டார்.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஈரோடு மாநகர் பகுதியில் குற்ற செயல்கள் அதிகரித்ததன் காரணமாக தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் நிர்வாக காரணங்களுக்காக பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story