குறுகிய காலத்தில் மக்களின் கோபத்தை தி.மு.க. அரசு சம்பாதித்துள்ளது


குறுகிய காலத்தில் மக்களின் கோபத்தை தி.மு.க. அரசு சம்பாதித்துள்ளது
x

குறுகிய காலத்தில் மக்களின் கோபத்தை தி.மு.க. அரசு சம்பாதித்துள்ளது என்று சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம் சாட்டினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பசுபதி வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாநில செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தலைமைக்கழக பேச்சாளர்கள் சுப்புராஜ், மதுரை இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-

மருந்து தட்டுப்பாடு

இன்றைக்கு விலைவாசியை உயர்த்தி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். கொரோனா போய், தற்போது மர்ம காய்ச்சல் பரவுகின்றது. ஆனால் மருந்து தட்டுப்பாடு உள்ளது. மருந்துகள் கொள்முதல் செய்ய முடியாத ஒருவர் எதற்கு நாட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர். தமிழக மக்கள் ஏன்டா, இந்த அரசுக்கு வாக்களித்தோம் என்று வேதனைப்படுகின்றனர். குறுகிய காலத்தில் மக்களின் கோபத்தை தி.மு.க. அரசு சம்பாதித்துள்ளது.

மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் அழிந்துவிடும். தி.மு.க.வினரே இந்த ஆட்சி எதுக்குன்னு கேட்கிறார்கள்.

இந்த குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உள்ள துரோகிகளை தூண்டிவிட்டு, அந்த கட்சியில் பிரச்சினை இருப்பதாக விவாதம் செய்கின்றனர்.

தப்பு கணக்கு

பா.ஜ.க.வை நாங்கள் உள்ளே நுழைய விடமாட்டோம் என தி.மு.க. கூறுகிறது. இங்கே எதிர்ப்பது போன்று ஒரு நடிப்பும், டெல்லியில் மறைமுகமாக உறவு வைத்துக்கொண்டு கனிமொழிக்கு பதவி வாங்கி கொடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.வை பிளவுப்படுத்தி, பலவீனமாக்கினால்தான் நாம் வெற்றி பெற முடியும் என மு.க.ஸ்டாலின் தவறாக கணக்குப்போட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ராமதாஸ், கண்ணன், பேட்டை முருகன் சுரேஷ்பாபு, ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், வளவனூர் நகர செயலாளர் முருகவேல், விழுப்புரம் நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் முத்தையன், துணைச்செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டு சேகர், கோதண்டராமன், ராதிகா செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.


Next Story