வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரக விதைகள் வினியோகம்
வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், பாரம்பரிய நெல் வகைகளின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரக விதைகள் வேளாண்மைத் துறையினரால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் வினியோகம் செய்திட ஏதுவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் பாரம்பரிய ரகங்களான தூயமல்லி, சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, செங்கல்பட்டு சிறுகமணி, சொர்ணாமசூரி, கருங்குறுவை ஆகியவை இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.50-ல் 50 சதவீதம் அரசு மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் இந்த விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் ரகங்களை பெற்று சாகுபடி செய்து பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தொிவித்து உள்ளார்.