ஆனைமலையில்ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ஆனைமலையில் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை-கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஆனைமலை
ஆனைமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியதாவது:- நா.மூ.சுங்கம் முதல் கம்பாளப்பட்டி வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்பட சில அதிகாரிகள் மட்டுமே ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். வேளாண்மை துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் ஒன்றிய குழு கூட்டத்திற்கு வருவதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உயர் அதிகாரிகள் மேல் பழி சுமத்துகின்றனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கவுன்சிலர்களிடம் கூறினால் கவுன்சிலர் யாரிடம் கூறுவது?. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள், அடுத்த கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வட்டார வளர்ச்சி அதிகாரி, அடுத்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்து கொள்வார்கள் என உறுதி அளித்துள்ளார்.






