பள்ளி ஆசிரியை தாக்கியதில் 8-ம் வகுப்பு மாணவன் படுகாயம்
ஆலாந்துறை அருகே பள்ளி ஆசிரியை தாக்கியதில், 8-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தார்.
ஆலாந்துறை அருகே பள்ளி ஆசிரியை தாக்கியதில், 8-ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தார்.
சிறப்பு வகுப்பு
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6 முதல் 8- ம் வகுப்பு வரை மொத்தம் 19 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் மோதல்
சம்பவத்தன்று வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது 6-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் நடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி மோதிக் கொண்டனர்.
இதை அந்த வழியாக சென்ற ஆசிரியை ஒருவர் பார்த்தார். அவர், 2 மாணவர்களையும் சமாதானம் செய்தார். பின்னர் அவர், 8-ம் வகுப்பு மாணவரிடம் தன்னை அறையில் வந்து சந்திக்குமாறு கூறி விட்டு சென்றார்.
பிரம்பால் அடித்தார்
அதன்படி 8-ம் வகுப்பு மாணவர் ஆசிரியையை அறைக்கு சென்று சந்தித்தார். அங்கு அந்த மாணவனை முட்டி போட வைத்த ஆசிரியை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவனின் பெற்றோர், பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் ஆலாந்துறை போலீசார் விரைந்து சென்று மாணவரின் பெற்றோரை சமாதானம் செய்தனர். அதை ஏற்று மாணவரின் பெற்றோர் புகார் அளிக்காமல் சென்றனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர், குழந்தைகள் நல வாரியத்துக்கு மனு அனுப்பி உள்ளனர். எனவே இதுதொடர்பாக, குழந்தைகள் நல வாரியம் விசாரணை நடத்தும் என தெரிகிறது.