சரக்கு மற்றும் பார்சல்கள் அதிகமாக இருந்தால் சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை-வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
சரக்கு மற்றும் பார்சல்கள் அதிகமாக இருந்தால் சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
சரக்கு மற்றும் பார்சல்கள் அதிகமாக இருந்தால் சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் சந்திப்பு
பாலக்காடு கோட்ட ரெயில்வே சார்பில் பொள்ளாச்சியில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட மேலாளர் திரிலோக் கோத்தாரி தலைமை தாங்கி, தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை கொண்டு செல்வதற்கும், விற்பனை செய்வதற்கும் ரெயில்வே உள்ள வசதிகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் ரெயில்வே அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களின் சரக்கு போக்குவரத்து தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு தினமும் மாலை 4.52 மணிக்கு வந்து சேருகிறது. சரக்கு போக்குவரத்திற்கு இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
சிறப்பு ரெயில்கள்
இந்த ரெயிலில் 16 டன் சரக்குகளை ஏற்றும் வகையில் இடவசதி உள்ளது. இதில் சென்னை மற்றும் பிற முக்கிய ரெயில் நிலையங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்ல முடியும். மேலும் சரக்குகள் மற்றும் பார்சல்கள் அதிகமாக இருந்தால் சிறப்பு ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பொள்ளாச்சி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்கிற திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்கு உள்ளூர் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் தற்காலிகமாக அரங்குகள் அமைக்கலாம். இதற்கு ரூ.1500 வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விழாவில் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் அருண் தாமஸ், வணிக ஆய்வாளர்கள் மணிகண்டன், ஷியாம் சுந்தர், ஜெயபிரகாஷ் மற்றும் தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.