சென்னிமலை பேரூராட்சியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடு; தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை


சென்னிமலை பேரூராட்சியில்   மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடு;  தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
x

சென்னிமலை பேரூராட்சியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதில் இரு வார்டு பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பெருந்துறை தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை பேரூராட்சியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதில் இரு வார்டு பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பெருந்துறை தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

மழை நீர் தேங்கியது

சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் பஸ் நிலையம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் மழைநீர் 6-வது வார்டுக்கு உள்பட்ட அய்யப்பா நகரில் உள்ள வடிகால் கால்வாய் வழியாக அறச்சலூர் ரோட்டை சென்றடையும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மழை நீர் முழுமையாக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதாக அய்யப்பா நகர் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

எதிர்ப்பு

இந்த நிலையில் அய்யப்பா நகருக்கு செல்லும் மழை நீரை பாதியாக தடுக்கும் வகையில் சென்னிமலை பேரூராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 11-வது வார்டுக்கு உள்பட்ட சோழன் வீதி வழியாக மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மேலும் இதற்காக பஸ் நிலையம் அருகே தார் ரோட்டின் குறுக்கே பாலமும் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் இந்த வழியே மழை நீர் வடிகாலை அமைத்தால் தண்ணீர் தேங்கும் என 11-வது வார்டுக்கு உள்பட்ட சோழன் வீதி பொதுமக்கள் கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து 2 வார்டுகளையும் சேர்ந்த பொதுமக்களிடம் சுமூக தீர்வு காண்பதற்காக நேற்று சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 6-வது மற்றும் 11-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இருதரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பு மக்களின் கோரிக்கைகள் குறித்து ஈரோடு கலெக்டரிடன் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அறிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story