செட்டியக்காபாளையத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பது எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


செட்டியக்காபாளையத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பது எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

செட்டியக்காபாளையத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

நெகமம்

செட்டியக்காபாளையத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பழமையான கட்டிடம்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஊராட்சிகளுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் செட்டியக்காபாளையம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதனால் அவ்வப்போது மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் கசிந்து உள்ளே இருந்த தளவாட பொருட்கள் அனைத்தும் நனைந்து வீணாகி வந்தது. இதனால் பழமையான அந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நூலகத்துக்கு மாற்றம்

இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம், அங்குள்ள நூலக கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள், வீட்டுவரி, குடிநீர் கட்டணம் மற்றும் அரசு அலுவல் தொடர்பாக வந்து செல்கின்றனர். ஆனால் நூலக கட்டிடமும் பழயை கட்டிடமாக இருந்தது. அங்கு மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகியது.

இதன் காரணமாக தளவாட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் நனையும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆவணங்களை அங்கு வைக்க முடியவில்லை. மேலும் இடவசதியும் குறைவு. இது தவிர பொதுமக்கள் வந்து செல்லவும் சிரமமாக இருந்தது.

திறக்க வேண்டும்

இதையடுத்து செட்டியக்காபாளையம் ஊராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு மாதங்கள் பல ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த இடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

செட்டியக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் தற்போது நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அது ஏற்கனவே பழமையான கட்டிடம். தற்போது சிதலமடைந்து, மழைக்காலத்தில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து வருகிறது. இதற்கிடையில் புதிதாக கட்டிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. அதை திறந்தால், அலுவலக பணிக்கு வசதியாக இருக்கும். எனவே அந்த கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story