கடலூர்மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அன்சுல்மிஸ்ரா கடலூர் வருகை தந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியமுடன் சேர்ந்து, கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாரப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, வண்டிப்பாளையம், சங்கொலிநகர், வேதவிநாயகா நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அரசு வழிகாட்டுதலின்படி சாலை அமைக்கப்பட்டுள்ளதா? என அதன் அளவு மற்றும் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கோதண்டராமபுரம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து நேரடியாக விவசாயிகளிடம் கேட்டறிந்து, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
புதிய பஸ் நிலையம்
இதையடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் நடக்கும் புதிய பஸ் நிலையத்திற்கான கட்டுமான பணிகளையும், ஆடூர் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையில் எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகள் முறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு இன்றைய தொகுத்தறி மதிப்பீட்டு முறையில் மொபைல் ஆப் மூலம் மதிப்பீடு நடந்து கொண்டிருந்ததையும், மாணவர்கள் அதில் பங்கு பெற்றதையும் பார்வையிட்டதுடன், அதில் அரும்பு, மொட்டு, மலர் என்ற பிரிவில் உள்ள மாணவ-மாணவிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவர்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களிடம் சுட்டிக்காட்டினார்.
இணையவழி பட்டா மாற்றம்
பின்னர் கடலூர் தாலுகா அலுவலகத்தில் இணையவழி பட்டா மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் குறித்தும், இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து, எளிய நடைமுறையில் துரிதமாக இணையவழி சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், பொறியாளர் புண்ணியமூர்த்தி மற்றும் வேளாண்மை, மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.