கூடலூரில் தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்க பேரணி- நகராட்சித்தலைவர் பரிமளா தொடங்கி வைத்தார்
கூடலூரில் தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்க பேரணியை நகராட்சித்தலைவர் பரிமளா தொடங்கி வைத்தார்.
கூடலூர்
கூடலூர் நகராட்சியில் தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்க பேரணி நடைபெற்றது. பேரணியை நகராட்சித் தலைவர் பரிமளா கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சிவராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு, ஐந்து முனை சந்திப்பு வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. பேரணியில் தோட்ட தொழிலாளர் குழந்தைகளின் தொழிற்பயிற்சி மைய மாணவ-மாணவிகள், வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் எனது குப்பை எனது பொறுப்பு, எனது நகரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிப்பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.