வெவ்வேறு விபத்துகளில்தொழிலாளி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.
தொழிலாளி பலி
தேவாரம் அருகே உள்ள செல்லாயிபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 24). கூலித்தொழிலாளி. லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காமேஸ்வரன். நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 14-ந்தேதி செல்லாயிபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீரபாண்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ஜெயக்குமார் ஓட்டினார். உப்புக்கோட்டை- போடேந்திரபுரம் சாலையில் சடையால்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டர் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். காமேஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரது தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்கூட்டரை ஓட்டி வந்த காமராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
போடி அருகே போ. மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (38).நேற்று முன்தினம் இவர், போ.மீனாட்சிபுரத்தில் இருந்து தனது காரில் பேரையூர் சென்று கொண்டிருந்தார். தேனி-போடி சாலையில் வனகிரி பண்ணைஅருகே வந்தபோது சாலையில் நடந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முதியவர் பலியானார்.
தகவல் அறிந்து அங்கு வந்த பழனிசெட்டிபட்டி போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கோடாங்கிபட்டி கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கருப்பசாமியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.