ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில்தெப்ப உற்சவம்
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. 25-ந் தேதி இரவு கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 26-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தின் வளாகத்தில் மலர்களால் தோரணங்கள் தொங்க விடப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் பெருமாளின் உற்சவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, தண்ணீரில் சாமி இறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது சுற்றிலும் திரண்டு இருந்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.