எட்டப்பராஜபுரம் ஊராட்சியில்கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கரையை உடைத்து நீர் வெளியேற்றம்:கலெக்டரிடம் விவசாயிகள் புகார்


எட்டப்பராஜபுரம் ஊராட்சியில்கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கரையை உடைத்து நீர் வெளியேற்றம்:கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:46 PM GMT)

எட்டப்பராஜபுரம் ஊராட்சியில் கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

தேனி

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகள், குறைகள் தொடர்பாகவும், அரசு நலத்திட்டங்கள் வேண்டியும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

கூட்டத்தில் மனு கொடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், கடமலை-மயிலை ஒன்றியம் எட்டப்பராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் வந்தனர். கலெக்டரிடம் அவர்கள் தங்கள் ஊரில் உள்ள கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்து மனு கொடுத்தனர்.

நீர் வெளியேற்றம்

மனு கொடுத்த விவசாயிகள் கூறும்போது, 'வேலாயுதபுரம் கிராமத்தில் வேலாயுதபுரம் கண்மாய் உள்ளது. கடந்த 11-ந்தேதி பெய்த மழையால் குளத்துக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அடுத்த 2 மாத காலத்துக்கு கால்நடைகளுக்கான குடிநீராக பயன்படுத்த போதிய அளவில் இருந்தது. நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும் வாய்ப்பாக இருந்தது. இந்த கண்மாயில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்காக குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றாமல், குளத்துக்குள்ளேயே சிறிய பள்ளம் தோண்டி தண்ணீரை அங்கு தேக்கிவிட்டு தடுப்புச்சுவர் அமைக்கலாம் என்று விவசாயிகள் கூறினோம். ஆனால், ஒப்பந்தப்பணி எடுத்தவர் குளத்தின் கரையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டார். இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story