தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் தர்ணா


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு  சத்துணவு ஊழியர்கள் தர்ணா
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் ரூ.6,875 வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதிக்கு ஏற்ப 50 சதவீத பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு ஆண்டாக உயர்த்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களின் பணிக்காலத்தை 60 வயதில் இருந்து 62 வயதாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

கோஷங்கள்

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம், கிராம சுகாதார செவிலியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தை மாநில செயலாளர் கிருபாவதி நிறைவு செய்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார். காலை 10 மணியளவில் இந்த தர்ணா போராட்டம் தொடங்கியது. மாலை 3.30 மணியளவில் போராட்டம் நிறைவு பெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.


Next Story