அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்டாக்டர்கள் பற்றாக்குறை


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்டாக்டர்கள் பற்றாக்குறை
x
தினத்தந்தி 14 April 2023 12:30 AM IST (Updated: 14 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில செயலாளர் ராணி கூறினார்.

திண்டுக்கல்

அரசு மருத்துவமனைகளில் ஆய்வு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ராணி, திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக சுகாதார தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 19 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்தோம். அதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள் சிரமப்படுவது தெரியவந்தது. கோபால்பட்டி, உலுப்பக்குடியில் 24 மணி நேரமும் பிரசவம் பார்ப்பது இல்லை. இதனால் பிரவசத்துக்கு மதுரை, திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

நத்தம் அரசு மருத்துவமனையில் 4 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். கோவிலூர் பெருமாள்கோவில் காலனி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட வசதி இல்லாமல் சமுதாய கூடத்தில் செயல்படுகிறது. பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் அமர்வதற்கு கூட இடவசதி இல்லை. மேலும் ஒருசில அரசு ஆஸ்பத்திரிகளில் கழிப்பறை வசதி இல்லை. இதேபோல் சில மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பை பதிவு செய்ய சுகாதார ஆய்வாளர்கள் கிடையாது.

108 ஆம்புலன்ஸ் தாமதம்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 'லிப்டு' செயல்படாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். பிரசவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு அழைத்தால் 108 ஆம்புலன்ஸ்கள் மிகவும் தாமதமாக வருவதால், தனியார் ஆம்புலன்சில் செல்வதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதுதவிர கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை, மகப்பேறு பெட்டகம் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக கலெக்டரிடமும், சுகாதாரத்துறை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறோம். எனவே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டிடம், கழிப்பறை, குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை தேவையான அளவு நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து மாநிலக்குழு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Related Tags :
Next Story