தேனியில் மது பாட்டிலால் எலக்ட்ரீசியனை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி: சிறுவன் உள்பட 2 பேர் கைது


தேனியில்  மது பாட்டிலால் எலக்ட்ரீசியனை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி:  சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

தேனியில் மது பாட்டிலால் எலக்ட்ரீசியனை தாக்கி செல்போன் பறிக்க முயன்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ராஜதுரை (வயது 26). எலக்ட்ரீசியன். இவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுவனும், ஒரு வாலிபரும் வந்தனர். அவர்கள் ராஜதுரையிடம் தெரிந்தவரிடம் பேசுவதற்காக செல்போன் தருமாறு கேட்டனர். ஆனால் அவர் தொடர்ந்து தனது செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததால், அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜதுரையிடம் தகராறு செய்தனர். அப்போது ஒருவர் பிளேடால் ராஜதுரையின் பின்பக்க கழுத்தில் கீறி காயப்படுத்தினார். மற்றொருவர் கீழே கிடந்த காலி மதுபான பாட்டிலை எடுத்து அவருடைய நெற்றியில் தாக்கினார். பின்னர் செல்போனை பறிக்க முயன்றனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்ததால் அந்த 2 பேரும் தப்பி ஓடினர். காயம் அடைந்த ராஜதுரை தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர், தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில், அவரை தாக்கியது கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story