தேனியில்பக்தர்கள், நோயாளிகளுக்கு மதுப்பிரியர்களால் தொல்லை:மதுக்கடைகளை இடமாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்


தேனியில்பக்தர்கள், நோயாளிகளுக்கு மதுப்பிரியர்களால் தொல்லை:மதுக்கடைகளை இடமாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:45 PM GMT)

தேனியில் பக்தர்கள், நோயாளிகளுக்கு மதுப்பிரியர்களால் தொல்லை ஏற்படுகிறது. இதனால் மதுக்கடைகளை இடமாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தேனி

தேனி பழைய பஸ் நிலையத்தை சுற்றி 5 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் ஒரு கடையில் மட்டுமே மதுபான பார் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மதுபான பார் வசதி கிடையாது. தேனி காட்டுபத்திரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் தினமும் காலை முதல் இரவு வரை மதுப்பிரியர்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

மதுபானங்களை வாங்கி திறந்த வெளியை மதுபான பார் ஆக மாற்றுவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மதுபான பிரியர்களால் பல்வேறு தொல்லைகள் ஏற்படுகின்றன. இதேபோல், பழைய பஸ் நிலையத்துக்கு நேர் எதிரே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

தேனி புதிய பஸ் நிலைய பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான பார்கள் அமைந்துள்ளன. இங்கு ஸ்கேன் பரிசோதனை மையத்துக்கு வந்து செல்லும் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் மதுபான பிரியர்கள் வழிநெடுகிலும் அமர்ந்து மது குடிப்பது, தகராறு செய்வதுமாக இருக்கின்றனர். எனவே தேனி நகரில் பக்தர்கள், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story